srilanka

ஜனாதிபதியின் பதிலில் திருப்தி இல்லை!



இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வழங்கிய பதிலில் திருப்தி இல்லையென தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று வார காலமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது, சட்டமா அதிபருடனும் நீதியமைச்சருடனும் கலந்துரையாடி பதிலொன்றை வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி உறுதியான பதிலை வழங்கும் வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமேனன், இதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வகுப்பு பகிஷ்கரிப்புக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தொடர்பான வழக்கு, சட்டமா அதிபரின் ஆலேசானையின் பிரகாரம் கடந்த மாதம் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த மூன்று வார காலமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




  • Advertisement