sports

உற்சாகத்துடனும் பரவசத்துடனும் வலம் வரும் விஜய்சங்கர்!



இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள உள்ளூர் மட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சகலதுறை வீரரான விஜய்சங்கர், உற்சாகத்துடனும் பரவசத்துடனும் வலம் வருவதாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் அறிமுகவுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்திய அணியில் இடம் கிடைத்து இருப்பதால் உற்சாகத்துடன், பரவசத்தில் உள்ளேன். இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். அது தற்போது நனவாகி இருக்கிறது.

இது எனது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அணியில் இடம் பிடித்ததை சிறப்பானதாக உணருகிறேன். முதல் முறையாக இந்திய வீரர்களின் ஓய்வறையில் அங்கம் வகிக்க இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து விளையாடியது நான் சகலதுறை வீரராக வளர வழிவகுத்தது. அத்துடன் நான் வீரராக முதிர்ச்சி காணவும், வெவ்வேறான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பதையும் கற்றுக்கொள்ள உதவியது. எனது துடுப்பாட்ட திறமை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நன்றாக இருக்கிறது. பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறேன்.

மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளித்தது. ஆனால் எனது உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்துகின்றேன்” என கூறினார்.

எஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவான், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ள நிலையில், உள்ளூர் மட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சகலதுறை வீரரான விஜய்சங்கர் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

32 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள விஜய் சங்கர், 5 சதம், 10 அரைசதம் உட்பட 1,671 ஓட்டங்களை குவித்துள்ளார். 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.




  • Advertisement